அமெரிக்காவில் முதல்முறையாக இந்து மத வெறுப்பை கண்டித்து ஜார்ஜியா மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்காவில், இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஒருசிலரால் இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு வருவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் கல்வி, மருத்துவம், ஐ.டி. போன்ற துறைகளில் முக்கிய பங்காற்றுவதுடன், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் யோகாசனம், ஆயுர்வேதம் , தியானம் போன்றவற்றை கொடையாக அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், 120 கோடிக்கும் மேற்பட்டோர் இந்து மதத்தை பின்பற்றிவரும் நிலையில், அமைதி, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை இந்து மதம் போதிப்பதால், இந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதாக ஜார்ஜியா மாநில அரசு தெரிவித்துள்ளது.