துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 28 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 வது நாளாக குவிந்து கிடக்கும் இடிபாடுகளை அகற்றும் போது பிறந்த சிசு முதல் முதியவர்கள் வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிலர் சடலங்களாகவும், படுகாயங்களுடனும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஹாத்தே நகரில் வானுயர நின்ற ஏராளமான கட்டடங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நிலநடுக்கத்தில் உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமானோரின் உடல்கள் ஹாத்தே நகரின் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
துருக்கி அதிபர் எர்டோகனும், அவரது மனைவியும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆரத்தழுவி ஆறுதல் கூறினர்
இதனைத் தொடர்ந்து ஹாத்தே நகரில் ஆபத்தான முறையில் இருந்த கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இந்நிலையில் துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐக்கிய நாடுகளின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட இருமடங்கு அல்லது அதற்கு மேலும் உயரும் என்று குறிப்பிட்டார்.