துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
துருக்கி - சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களான நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் அசுரவேகத்தில் நடந்து வருகின்றன.
வீடுகளை இழந்த 4 லட்சம் பேர் அரசு முகாம்கள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விளையாட்டு மைதானங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் 450 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு கோடியே 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாத கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
துருக்கியின் ஹாத்தே நகரம் தற்போது முற்றிலும் உருக்குலைந்து, சிதைந்து சின்னாபின்னமாகி காட்சியளிக்கும் கழுகுப் பார்வைக் காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதே நகரில் இடிபாடுகளுக்கு நடுவே ஏதாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர்.
ஹதேவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தை ஒன்றுக்கு மீட்புப் படையினர் வரும்வரை குடிக்க நீர் வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
காரமனமாரஸ் நகரில் வீடுகளை முற்றிலும் இழந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்குவதற்கு இடமின்றி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருக்கின்றனர்.
சிரியாவின் வரலாற்று நகரமான இட்லிப் ஏற்கனவே உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளது. இடிபாடுகளில் சிக்கி 2 நாட்களாக உயிருக்குப் போராடிய சிறிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் ராணுவ வீரர்களையும், மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்துள்ளன.