ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கு வெற்றி கிட்டி வருவதாக ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ரஷ்ய படைகளால் ஏவப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இது மிகப்பெரிய தாக்குதல் எனவும் உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தலைநகர் கீவில், 5 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கீவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும்,ரஷ்யாவின் பல ஏவுகணைகளை உக்ரைன் தடுத்து வீழ்த்தியதாகவும் கீவ் மேயர் தெரிவித்தார்.
இரண்டு ஏவுகணைகள் உக்ரைனை அடுத்த போலந்தின் எல்லைப்பகுதியில் விழுந்தததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று போலந்து குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள் குழுவின் பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை மேற்கொண்ட போலந்து பிரதமர் Mateusz Morawiecki, ராணுவத்தை தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
நேட்டோ நாடுகளில் ஒன்றான போலந்தின் எல்லைக்குள் இரண்டு ஏவுகணைகள் விழுந்ததற்கான உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை எனவும், இதுகுறித்து மேலும் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் உள்ள ப்ரெஸ்வோடோவில் இரண்டு ராக்கெட்டுகள் விழுந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 85 ஏவுகணைகள் ரஷ்யத் தரப்பில் இருந்து ஏவப்பட்டதாகவும், தங்கள் எரிசக்தி உள்கட்டமைப்பை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மின்நிலையங்களைக்குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டதால் 70 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.