மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் தனது 96-ம் வயதில் கடந்த 8ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடல் ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எலிசபெத்தின் உடலுக்கு, ஏராளமானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராணி எலிசபெத்தின் 8 பேரக்குழந்தைகளும் அவரது உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர். இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ராணுவ உடையிலும், இளவரசிகள் பீட்ரைஸ், யூஜெனி, சாரா டிண்டால் உள்ளிட்டோர் கருப்பு நிற உடையிலும் வந்து ராணியின் சவப்பெட்டியை சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.
நாளை அதிகாலை வரை ராணியின் உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும். பின்னர், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வதற்காக அருகிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
இறுதிச்சடங்கை தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதால் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அந்நாட்டின் நேரப்படி காலை 11.40 முதல் பிற்பகல் 12.10 வரை 30 நிமிடங்களுக்கு விமானங்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சத்தத்தால் ஏற்படும் ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் பொல்சனேரோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்டோரும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் இறுதிச்சடங்கினை, பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையிரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பூங்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இறுதிச்சடங்கை காண பெரிய திரைகள் அமைக்கப்படும் என்றும் ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச்சடங்கிற்கு அதிக மக்கள் வரக்கூடும் என்பதால் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.