கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் தப்பிச் சென்றார். அவர் ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முதல் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் அறிவித்தபடி வாக்களிக்கவில்லை.
தேர்தலின் போது எம்.பி.க்கள் வேட்பாளரின் பெயருக்கு எதிரே ஒன்று என குறிப்பிட வேண்டும் என்றும் அப்படி குறிப்பிடாத வாக்குகள் செல்லாது என நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார்.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்தல் 2 மணி நேரத்திற்குள்ளாக நிறைவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. இடதுசாரி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவுவுக்கு வெறும் 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், இருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எட்டாவது அதிபராக தேர்வாகியுள்ள ரணில், நாட்டை விட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலமான 2024 வரை அதிபராக இருப்பார்.
அதிபராக தேர்வான பிறகு, இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே நாடு கடுமையான சூழ்நிலையில் இருப்பதாகவும், மிகப்பெரிய சவால்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே கூடியவர்கள், போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என முழக்கமிட்டனர்.