இலங்கையில் பொருளாதார நெருக்கடிச் சூழலில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே வரும் 13ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் பலரும் பதவி விலகியுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உள்ளது.
மின்சாரம், எரிபொருள் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுத் தலைநகர் கொழும்பில் திரண்ட மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர்.
அப்போது அங்குப் பாதுகாப்புக்கு நின்ற சிறப்பு அதிரடிப் படையினர் பொதுமக்களைத் தாக்கியதுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் மதிற்சுவரில் துப்பாக்கியால் சுட்டனர்.
பெருமளவில் மக்கள் வந்ததால் பாதுகாப்புப் படையினர் செய்வதறியாது ஒதுங்கினர். அங்கிருந்து கோத்தபய ராஜபக்சே ஒரு காரில் தப்பிச் சென்றதாகவும், குடும்பத்தினருடன் ஆம்புலன்சில் மறைந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக ஒரு கருத்தும், ராணுவத் தலைமையகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக மற்றொரு கருத்தும் நிலவுகிறது.
அதிபர் மாளிகைக்குள் புகுந்த மக்கள் அங்கிருந்த உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றனர். இளைஞர்கள் பலர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் துள்ளிக் குளித்து விளையாடினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் அவர் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.
அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே இருநாட்களில் பந்துல குணவர்த்தன, மனுச நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகிய மூன்று அமைச்சர்கள் நேற்றுப் பதவி விலகினர்.
வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா ஆகியோர் இன்று பதவி விலகியுள்ளனர்.
இலங்கை அதிபர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றிப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாகப் பணத்தை எண்ணும் காட்சியும் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மின்வெட்டு நிலவும் நேரத்தில் அதிபர் மாளிகையில் மின்கருவிகள், குளிரூட்டிகள் அனைத்தும் இயங்கியதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு எரிவாயு ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் இன்று வருவதாகவும், எரிவாயு ஏற்றிய மற்றொரு கப்பல் நாளை வரவுள்ளதாகவும், இதையடுத்துச் சமையல் எரிவாயு வழங்கல் தொடங்கும் என்றும் அரசு செயலகம் தெரிவித்துள்ளது.