அமெரிக்காவில் பேச்சு குறைபாடால் கிண்டலடிக்கப்பட்டு வந்த 18 வயது இளைஞன் ஒருவன், ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக சுட்டதில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில், மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டே என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளி வளாகத்துக்குள், கைத்துப்பாக்கி மற்றும் AR 15 ரக தானியங்கி துப்பாக்கியுடன் புகுந்த இளைஞன் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான்.
கவச உடையில் ஒருவர் கண்மூடித்தனமாகத் சுடுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் திரண்டனர். அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சுட்டதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பள்ளி குழந்தைகளும், 2 ஆசிரியைகளும் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சால்வடோர் ரமோஸ் (Salvador Ramos) என்ற அந்த இளைஞன் துரித உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளான். சிறு வயது முதலே அவனது பேச்சு குறைபாட்டையும், கண்களுக்கு மை இடும் பழக்கத்தையும் பலர் கிண்டலடித்து வந்ததால் பெரும்பாலும் தனிமை விரும்பியாக இருந்துள்ளான்.
தனது 18வது பிறந்த நாளை முன்னிட்டு 2 ரைபிள் துப்பாக்கிகளை வாங்கிய ரமோஸ் (Ramos), அவற்றின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண் தோழிக்கு அனுப்பியுள்ளான். தான் செய்யப்போகும் ஒரு காரியம் பற்றி கூற விரும்புவதாக ரமோஸ் தெரிவித்துள்ளான்.
இதற்கிடையே, மேல்நிலை பள்ளித் தேர்வில் தோல்வி அடைந்ததற்காக திட்டிய தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு விட்டு பள்ளிக்கூடத்தில் இந்த கொடூர தாக்குதலை அவன் அரங்கேற்றி உள்ளான். துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து அந்த பள்ளியை நோக்கி பெற்றோர்கள் பதறியடித்து ஓடிய காட்சிகள் காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உயிரிழந்த 19 குழந்தைகள் மற்றும் இரு ஆசிரியைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்க தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.