கோத்தபயா ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.இதனிடையே இலங்கையில் அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் விலைவாசி உயர்வு மின்வெட்டு உணவுத் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பெருந் திரளாக மக்கள் அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று அதிபர் கோத்தபயா ராஜபக்சேயும் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயும் பதவிவிலக வலியுறுத்தி விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.
இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.3 மாதங்களுக்கு முன்பு கிலோ 500 ரூபாய்க்கு விற்ற ஆப்பிள் இப்போது கிலோ ஆயிரம் ரூபாயாகி விட்டது.
தினசரி 13 முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவ அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜபக்சே அரசு நாட்டின் அனைத்து வளங்களையும் சீனாவுக்கு விற்று விட்டதாக போராட்டம் நடத்துபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு, கோவிட் போன்ற இடர்களால் சுற்றுலாத்துறையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி தட்டுப்பாடு , பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு போன்ற பிரச்சினைகளால் இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து காட்சியளிக்கிறது.
இந்நிலையில் கூட்டணிக் கட்சியினர் 41 பேர் வெளிநடப்பு செய்ததையடுத்து கோத்தபயா ராஜபக்சேயின் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்துவிட்டது. புதிதாகப் பதவியேற்ற நிதியமைச்சர் அலி சாபிரியும் ராஜினாமா செய்து விட்டார். எதிர்க்கட்சியினரின் கூட்டணியுடன் அரசு அமைப்பது பற்றிய அதிபரின் யோசனையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
இதனிடையே நார்வே, ஈராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.