ரஷ்ய விண்வெளி வீரர் இருவரும், அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்ய விண்கலம் மூலம் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இத்தகைய சூழலில் இருநாட்டு விண்வெளி வீரர்களும் ஒரே விண்கலத்தில் பூமிக்குத் திரும்பியது விண்வெளித் துறையில் இருநாடுகளின் ஒத்துழைப்புக்குச் சான்றாக உள்ளது.
அமெரிக்க வீரர் மார்க் வந்தே ஹெய், பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் தங்கியிருந்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர் ரஷ்யாவின் அன்டன் ஸ்காப்லேரோவ், பீட்டர் துப்ரோவ் ஆகியோருடன் இணைந்து ஒரே விண்கலத்தில் பாராசூட் உதவியுடன் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளார்.