உக்ரைனுடன் 4வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ரஷ்யப் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தியதால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் இன்று 20ம் நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் அளவிலா 4ம் கட்ட பேச்சுவார்த்தை காணொலிக் காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிய்வ்வில் உள்ள ஒபோலான் மாவட்டத்தில் 9 மாடிக் கட்டத்தின் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இதனைப் போலவே கிய்வ் நகருக்கு அருகே உள்ள விமான தொழிற்சாலை மீதும் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தளம் உக்ரைனின் மிக முக்கியமான சர்வதேச சரக்கு விமான நிலையம் மற்றும் ஒரு முக்கிய ராணுவ விமான தளமாகும்.
இந்த நிலையில் 4வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்தை அடைவது, ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுவது மற்றும் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை நிறுவுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர் கூறினார்.
ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் போர் தொடங்கியதில் இருந்து 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யப் படைகள் விரைவில் நேட்டோ நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.