சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென்று உயர்ந்து வருகிறது.
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 140 டாலராக உயர்ந்துள்ளது.உக்ரைன் -ரஷ்யா போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.தவிர சமையல் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றுக்கான ஆதார விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை சார்ந்து நிற்கும் நிலை உள்ளது. இதனால் உள்நாட்டில் விலை அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் வரை விலை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரி வருகின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் பணவீக்கமும் அதிகமாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.