எளிதில் உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற நினைப்பில் போரை தொடங்கி உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா வீரர்களின் டாங்கிகளுக்கு சிறிய அளவிலான ஜாவ்லின் என்ற டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வைத்து உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவாலை கொடுத்து வருகின்றனர். அமெரிக்கா கொடுத்து உதவி உள்ள ஜாவ்லின் ஆயுதத்தின் உக்கிர தாக்குதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
உக்ரைனை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரஷ்யா மூர்க்கத்தனமாக போரை நடத்தி வருகின்றது. ஒருபுறம் விமானப்படை மூலம் உக்ரைனின் கார்கிவ், கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது கடுமையான குண்டு மழை பொழிந்து வருகின்றது.
உக்ரைன் வீரர்களும் அதற்கு சளைக்காமல் போரிட்டு ரஷ்யாவின் ஹெலிகாப்டர்களையும், விமானங்களையும் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக தீவிர போர் நடக்கின்ற நிலையில் உக்ரைனை எளிதாக வென்று விடலாம் என்று படையெடுத்துச்சென்ற ரஷ்யாவின் பீரங்கிகள் பலவற்றுக்கு உக்ரைன் கடும் சவாலை கொடுத்து வருகின்றது
இந்தபோரில் உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்து உதவிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான எப்.ஜி.எம் 148 ஜாவ்லின் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. பார்ப்பதற்கு மினி சைஸ் ராக்கெட் லாஞ்சர் போல எளிதாக தூக்கிச்செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜாவ்லின் மூலம் ஏவுகணைகளை ஏவி துல்லியமாக ரஷ்ய டாங்கிகளை தாக்கி வருகின்றனர் உக்ரைன் வீரர்கள்
செடி மறைவிலும் , பாறைகளுக்கிடையேயும் பதுங்கிக் கொண்டு தங்கள் கையிலிருக்கும் ஜாவ்லின் மூலம் சிறிய ரக ஏவுகனை குண்டுகளை ஏவி இலக்கை தாக்கி அளித்து வருகின்றனர் உக்ரைன் ராணுவ வீரர்கள்.
அந்தவகையில் 80 டாங்கிகள், 516 ராணுவ வாகனங்கள், 10 போர் விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் 2800 ராணுவ வீரர்களை இந்த ஜாவ்லின் துவம்சம் செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க வீரர்கள் களத்தில் இறங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபடாவிட்டாலும் அமெரிக்கா கொடுத்து உதவிய ஜாவ்லின்கள் உக்ரைனுக்கு கை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஜாவ்லின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ரஷ்ய டாங்கிகளின் மேல் பகுதியில் தடுப்பு கம்பி கவசத்துடன் போரில் ஈடுபட்டாலும் , தடுப்பு கவசங்களையும் சேர்த்தே ஜாவ்லின் ஏவுகணைகள் தாக்கி அளித்து வருகின்றன.
ரஷ்யாவின் டி 72 மற்றும் டி 64 ரக டாங்கிகள் ஆரம்பத்தில் எவ்வித எதிர்ப்பும் இன்றி உக்ரைன் எல்லைக்குள் புகுந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவற்றில் சில ஜாவ்லின் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு உள்ளன.
ஜாவ்லின் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள் 65 மீட்டரில் இருந்து 4000 மீட்டர் தூரம் வரையிலான இலக்கை 94 சதவீதம் மிகச்சரியாக தாக்கும் சக்தி கொண்டது என்றும், 2 1/2 மைல் தூரம் வரையிலும் பயணித்து தாக்கும் வல்லமை கொண்ட இதனை பயன்படுத்துவது மிகவும் சுலபம் என்பதால் உக்ரேனிய வீரர்கள் தங்கள் இலக்கை தாக்கி அழித்த மகிழ்ச்சியை நடனமாடி வெளிப்படுத்தி வருகின்றனர்
ஜாவ்லின் மூலம் வெளியாகும் ராக்கெட் குண்டுகள் 10 முதல் 12 நொடிகளில் இலக்கை தாக்கி அழிக்கும் வேகத்துடன் கூடிய திறன் கொண்டவை என்பதால் உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்த நிலையின் உக்ரைனின் தேவையை அறிந்து கூடுதலாக 1500 ஜாவ்லின்களை அமெரிக்கா கொடுத்து உதவி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ரஷ்யா வீரர்களுக்கு ஜாவ்லின் சவாலாக இருக்கிறதே ஒழிய போர்களத்தில் ரஷ்யாவின் கைகளே ஒங்கி நிற்கின்றது. மேலும் இந்த போரில் தங்களிடம் உள்ள பல்வேறு அதி நவீன ஆயுதங்களை ரஷ்யா இன்னும் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.