உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரின் தாக்கம் நீண்டகால நீடிக்கும் என்றும், உலகம் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் 3ஆவது நாளாக போர் நீடிக்கும் நிலையில், இமானுவல் மேக்ரானுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொலைபேசியில் கலந்துரையாடினார். இதன் பின்னர் பேசிய மேக்ரான், உக்ரைன் அதிபரின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டிற்கு போதிய அளவில் ஆயுதங்கள், போர் தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும், ஐரோப்பிய கண்டத்திற்கு மீண்டும் போர் திரும்பியுள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதினால் அவை ஒருதலைபட்சமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் மேக்ரான் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பேசிய உக்ரைன் அதிபர், மேற்கு நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வந்தவண்ணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற நாடுகளுடனான ராஜாங்க ரீதியிலான உறவில் இன்று புதிய நாள் என்றும் அவர் தெரிவித்தார்.