சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளின் தளங்களை குறிவைத்து துருக்கி படையினர் நேற்று வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டபோது, அதில் சிக்கி வடகிழக்கு சிரியாவின் Derik பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் அமைந்துள்ள குர்திஷ் போராளிகளின் பயிற்சி மையங்கள், தங்குமிடங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் டிரோன்களைக் கொண்டு அங்குள்ள துருக்கி படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்திருப்பதோடு, தாக்குதலில் குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
துருக்கி படைகள் கைவசம் உள்ள அல் பாப் பகுதியில் குர்திஷ் படையினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
சிரியாவில் உள்நாட்டுப்போர் 2011-ம் ஆண்டு தொடங்கி நடந்து வரும் நிலையில், அரசுக்கு ஆதரவான குர்திஷ் கிளர்ச்சிப்படையை குறிவைத்து துருக்கி படைகள் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.