அமெரிக்காவில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து தப்பி சென்ற 3 ஆய்வுக்கூட குரங்குகளை போலீசார் ஹெலிகாப்டர் உதவியுடன் விடிய விடியத் தேடினர்.
பென்சில்வேனியா மாநிலத்தில், ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான குரங்குகளை ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 4 குரங்குகள் தப்பி சென்றன. உயிரியல் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளில் அவை பயன்படுத்தப்பட்டதால், அவற்றின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அவை தப்பி விடாதபடி அப்பகுதியை சுற்றிவளைக்குமாறு உத்தரவிட்டனர்.
ஒரு குரங்கு உடனடியாக பிடிபட்ட நிலையில், மற்ற மூன்றையும் போலீசார் ஹெலிகாப்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் உதவியுடன், உறைபனியையும் பொருட்படுத்தாமல் தேடித் திரிந்தனர்.
நள்ளிரவுக்குப் பின் 3 முறை துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதாகவும், அதன் பின் அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.