உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது நபருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.
மாற்று இதயம் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் இருந்த David Bennett என்ற அந்த நோயாளிக்கு சிறப்பு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
இந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் David Bennett நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பன்றியின் இருதயம் வால்வுகள்(valve) மனிதர்களுக்கு பொருத்துவது வழக்கத்தில் உள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், இந்த இருதய மாற்று சிகிச்சை மூலம், உடல் உறுப்பு தானம் மூலம் கிடைக்கும் உறுப்புகளுக்கான பற்றாக்குறை குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேலானோர் உடல் உறுப்பு தானம் பெற காத்திருப்ததாக கூறப்படும் நிலையில், அது கிடைக்காமல் ஒரு நாளைக்கு 17 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.