கொரோனா தொற்றால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் இலங்கை தடுமாறி வருகிறது.
சீனாவிடம் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, இலங்கை அரசு கடன் வாங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் சுற்றுலாத்துறை முடங்கியுள்ளதால், இலங்கையின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கொழும்பு வந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வான்ங் யீ (Wang Yi) அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது, கடன் தவணை முறைகளை மாற்றியமைத்து தரவேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் தங்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்றும், சீன அமைச்சரிடம் இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதாக, அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பான்தோட்டை துறைமுகக் கட்டுமானப் பணிக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அந்த துறைமுகத்தை சீனாவிடம் 99 வருட குத்தகைக்கு தரவேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. இதுபோல், ஈரானிடம் வாங்கிய எண்ணெய்க்கு பணம் தரமுடியாமல், அதற்கு ஈடாக தேயிலையை ஏற்றுமதி செய்து இலங்கை அரசு சமாளித்து வருகிறது.