அமெரிக்காவில், 10 வயது சிறுமிக்கு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சவாலை அமேசானின் அலெக்சா (Alexa) வாய்ஸ் அசிஸ்டெண்ட் விடுத்தது பலத்த சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது தவறு சரி செய்யப்பட்டுள்ளதாக அமேசான் விளக்கமளித்துள்ளது.
ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர், ஸ்மார்ட் லைட் சாதனங்களை இயக்குவது மட்டுமின்றி வானிலை, விளையாட்டு ஸ்கோர் என மனிதர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு இணையத்தில் தேடி விடையளிக்கும் வாய்ஸ் அசிஸ்டெண்டாக அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர் இயங்கி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 10 வயது சிறுமி வீட்டில் பொழுது போகாததால், தனக்கு ஒரு சவாலை விடுமாறு அலெக்சா-விடம் கேட்டுள்ளார். இணையத்தை அலசிய அலெக்சா, பிளக்-பாயிண்டில் சொருகப்பட்ட பிளக்கை நாணயத்தால் தொடுமாறு சிறுமிக்கு சவால் விடுத்துள்ளது.
அவ்வாறு செய்தால் மின்சாரம் தாக்கக்கூடும் என்பதால் சிறுமி அதனை செய்ய மறுத்துவிட்டார். கடந்தாண்டு டிக்-டாக்கில் பிரபலாமான இந்த பென்னி சாலஞ்சை (penny challenge) செய்ய முயன்ற பலருக்கு மின்சாரம் பாய்ந்து விரல்கள், கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமிக்கு அலெக்சா இப்படி ஒரு அபாயகராமான சவாலை விடுத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து சிறுமியின் தாயார் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், தவறை சரி செய்து, அலெக்சா அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.