ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக, ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 11ஆயிரத்து500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதன்முதலாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, பல நாடுகளில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவது, தனிமைப் படுத்தி கொள்வது போன்ற பிரச்சனைகளால், போதிய அளவில் ஊழியர்கள் கிடைக்கவில்லை எனவும் அதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இன்று வரை 11 ஆயிரத்து 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், புத்தாண்டு கொண்டாட சொந்த நாடுகளுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.