துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித்தின் 6ஆவது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு , இந்திய மதிப்பில் 5,500 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
72 வயதான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமராகவும் செல்வாக்கு மிக்க குதிரை பந்தய உரிமையாளர்களில் ஒருவராகவும் இருப்பவர். அவருக்கும் ஜோர்டான் முன்னாள் மன்னரின் மகளான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இளவரசி ஹயா 2019 இல் தனது குழந்தைகளுடன் துபாயில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் 5,500 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய ஜீவனாம்ச தொகையாக கருதப்படுகிறது.