விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது காதலி ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில், அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நீண்டகால நீதிமன்ற விசாரணையால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் அவரது காதலி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த மனுவை இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலுக்கு அனுப்புமாறு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், அசாஞ்சே நாடு கடத்தப்படுவாரா இல்லையா என்பது, ப்ரீதி பட்டேல் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.