நைஜீரியாவில் பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்து, பெருமளவு எண்ணெய் வெளியேறி வருவதால், பாயல்சா பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வாரங்களாக தொடரும் இந்த எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த முடியாமல், நைஜீரிய அரசு தடுமாறி வருகிறது. சிலர் சட்டவிரோதமாக எண்ணெய் திருட முயற்சி செய்வதால், இத்தகைய விபரீதம் ஏற்படுவதாக, சம்பந்தப்பட்ட எண்ணெய் கிணற்றின் உரிமையாளரான, ராயல் டச் ஷெல் நிறுவனம், விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, அப்பகுதியில் விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழில் செய்வோரின், வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பாயல்சா நீர்நிலைகளில் அதிகளவில் கிடைத்த நண்டுமீன், எண்ணெய் கசிவால் முற்றிலும் அழிந்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.