கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவருவது மக்களின் கைகளில் தான் உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியசஸ் தெரிவித்துள்ளார்.
பெர்லினில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர், கொரோனாவை ஒழிப்பதற்கான ஆயுதங்கள் மக்களின் கைகளில் இருப்பதாகவும் ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.பலனளிக்க கூடிய பொது சுகாதார கட்டுப்பாட்டு வழிமுறைகளும், திறமையான மருத்துவ வசதிகளும் இருந்தாலும், உலக மக்கள் அவற்றை முழுமையாக பயன்படுத்த முன்வரவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார்.
வாரம் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் கொரோனா மரணங்கள் நிகழும் நிலையில், பெருந்தொற்று ஓய்ந்து விட்டது என இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். இதர நாடுகளை விட்டுவிட்டு எந்த நாடும் தனிப்பட்ட வகையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட இயலாது என்றும் டெட்ரோஸ் அதாநோம் கூறினார்.