பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் பட்டப்பகலில் தேவாயலயம் ஒன்றில் வைத்து மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
69 வயதான டேவிட் அமெஸ், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர். வெள்ளிக்கிழமை தனது தொகுதியான எசெக்ஸ் தொகுதியில் உள்ள ஒரு சர்ச்சில், பொது மக்களை சந்திப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 25 வயது இளைஞர் ஒருவன், டேவிட் அமெஸ் அருகே சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தினான்.
இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார். அங்கிருந்த போலீசார் எம்.பி.,யை கத்தியால் குத்திய இளைஞனை உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனது தொகுதி மக்களை டேவிட் அமெஸ் சந்திப்பது வழக்கமாக கொண்டிருந்த நிலையில், இந்த துயரம் நடைபெற்றுள்ளது. ஆளும்கட்சி எம்.பி கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பிரிட்டனில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.