சீனாவில் வரும் ஆண்டுகளில் மக்கள் தொகை குறையும் என்று கூறப்படும் நிலையில், 3 ஆவதாக குழந்தை பெற்றால் நிதியுதவி அளிக்கப்படும் என அங்குள்ள மாவட்ட நிர்வாகம் ஒன்று அறிவித்துள்ளது.
கான்சு மாகாணத்தில் உள்ள லின்சே என்ற மாவட்ட நிர்வாகமே, மக்கள், அதிக குழந்தைகளை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டோடு நிறுத்தாமல், 3 ஆவது குழந்தை பிறந்த உடன் அந்த தம்பதிக்கு 777 டாலர்கள் அதாவது சுமார் 57 ஆயிரம் ரூபாய் ஒரே தவணையாக வழங்கப்படும்.
அந்த குழந்தைக்கு 3 வயது நிறைவடைவதற்குள் மேலும் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டும் உள்ளவர்களுக்கு சிறு ஊக்கத் தொகையும், பள்ளி கல்விக் கட்டணமும் வழங்கப்படும்.
லின்சே மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்த காரணத்தால் பிள்ளை பெற ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.