அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதல் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய கடந்த 15 ஆம் தேதி முதல் இதுவரை அமெரிக்கா தலைமையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமானங்கள் வாயிலாக மீட்கப்பட்டுள்ளனர்.ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலகுவதற்கான கெடு வரும் 31 ஆம் தேதி முடிய உள்ளது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஆப்கானியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களும், அமெரிக்க படைகளை சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டனர். இதேபோல, காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குதலில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் ஈடுபடலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
காபூலில் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க தூதரகத்தின் சார்பில் அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் கடைசியாக காபூலில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு தற்கொலை தாக்குலை நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை அதிபர் பைடனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஐஎஸ் தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆப்கானியர்களை பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல தாலிபன்கள் உதவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதநேய பணிகளை மேற்கொள்ள காபூலில் ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருமாறு பிரிட்டனும், பிரான்சும் ஐ.நா விடம் கோரிக்கை வைத்துள்ளன.