உலகின் பல நாடுகளிலும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஹவானா சிண்ட்ரோம் எனப்படும் மர்மத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இது கதிரியக்க ஆயுதங்களால் நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதலா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தலைவலி, குமட்டல், மூளைப் பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய ஓர் மர்ம நோய் ஹவானா சிண்ட்ரோம் எனக் கூறப்படுகிறது. மின்காந்த அலைகள், கதிரியக்கம் ஆகியவற்றை வெளியிடும் மின்னணு ஆயுதங்கள் மூலம் மனிதர்களின் உடலில் நுண்ணலைக் கதிர்களைச் செலுத்துவதால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மீயொலி, நஞ்சு ஆகியவற்றாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டு முதன்முதலாகக் கியூபா தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகத்தில் உள்ளோருக்கு இதுபோன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அதிலிருந்து இதை ஹவானா சிண்ட்ரோம் என அழைக்கின்றனர்.
கியூப அரசு தான் இத்தகைய தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப் நிர்வாகம், அங்கிருந்த அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டதுடன், பதிலடியாக அமெரிக்காவில் இருந்த கியூப தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
அதன்பின் பலமுறை சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாயன்று வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் பலருக்கு இந்த ஹவானா சிண்ட்ரோம் அறிகுறிகள் தென்பட்டதால், அங்குச் செல்லவிருந்த துணை அதிபர் கமலா ஹாரிசின் பயணம் பல மணி நேரம் தாமதமானது.
அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றிய மார்க் பாலிமரோபோலஸ் 2017ஆம் ஆண்டில் மாஸ்கோவில் தானும் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மட்டுமே இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாவதால் இதன் பின்னணியில் ரஷ்யா இருக்குமோ என்றும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் ஐயம் கொண்டுள்ளனர்.
ஹவானா சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டோர், குவிக்கப்பட்ட, அதிக ஓசையுள்ள கூர்மையான ஒலியைக் கேட்டதாகவும், இதையடுத்துக் கக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். சிலர் மூக்கிலிருந்து இரத்தம் வடிந்ததாகவும், தலைவலித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹவானா சிண்ட்ரோம் குறித்துப் பல ஆண்டுகளாகப் புகார்கள் வந்தபோதெல்லாம் மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறிப் புறந்தள்ளிய அமெரிக்க அரசு, இப்போது அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவில் பணியாற்றிய அதிகாரிகளும், தூதரக அதிகாரிகளும் இத்தகைய தாக்குதல்களுக்கு ரஷ்யாவையே குற்றஞ்சாட்டுகின்றனர். பனிப்போர்க் காலத்தில் மூளைப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுதங்கள் குறித்து சோவியத் ரஷ்யா ஆராய்ச்சி செய்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுண்ணலைக் கதிரியக்கத்தை உண்டாக்கும் கருவிகளை ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் வைத்திருந்ததாக அவர்களின் கணினிகள், செல்பேசிகளை ஒற்றறிந்த அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
குவிக்கப்பட்ட நுண்ணலைக் கதிர்களால் ஹவானா சிண்ட்ரோம் ஏற்படுவதாக அமெரிக்கத் தேசிய அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது. இதுபற்றி விரிவாக ஆராய அமெரிக்க உளவுத்துறை ஒரு தனிப்பிரிவையும் அமைத்துள்ளது.