புவி வெப்பமடைதலால் ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள கிரீன்லாந்தில் வெப்பநிலை இயல்புக்கு அதிகமாக உயர்ந்துள்ளதால் மிக அரிதான நிகழ்வாக அங்கு மழை பெய்துள்ளது.
கிரீன்லாந்தில் கோடைக்காலத்தில் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை பத்து டிகிரி செல்சியசாக இருக்கும். இந்த ஆண்டு இயல்புக்கு மாறாக 20 டிகிரி செல்சியசாக வெப்பநிலை உயர்ந்ததால் பனிப்பாளங்கள் உருகுவதும் வழக்கத்தைவிட இருமடங்காக அதிகரித்துள்ளது.
கடுங்குளிர் நிலவும் கிரீன்லாந்தில் நீராவி குளிர்ந்து பனிக்கட்டியாகிவிடும் என்பதால் மழை பெய்வதில்லை. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிப்பால் அரிதான நிகழ்வாக ஆகஸ்டு 14ஆம் நாள் அங்கு மழை பொழிந்துள்ளது.
அதைத் தொடர்ந்து மூன்று நாட்களில் மொத்தம் 700 கோடி டன் அளவுக்கு மழை பொழிந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டில் இருந்து பதிவான மழையளவுகளில் இது அதிகம் எனக் கூறப்படுகிறது.