எல்லைத் தகராறு விவகாரத்தில், அஸ்ஸாம் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற காவல்துறையினருக்கு மீசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி எல்லையில் இரு மாநில மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அசாம் போலீசார் 6 பேர் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இரு மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் அதிகாரிகள் மீது மீசோரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அசாம்- மிசோரம் முதலமைச்சர்களையும் தொடர்புகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமுகநிலையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார்.
இந்நிலையில், அசாம் வழக்குகளை திரும்பப் பெற காவல்துறைக்கு உத்தரவிட்ட மீசோரம் முதலமைச்சர் தமது டிவிட்டர் பக்கத்தில் சுமுகமான உறவை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார். இதனை வரவேற்பதாக தெரிவித்த அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, வரும் 5ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமது அமைச்சர்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.