இந்திய வங்கிகளில் கடன் வாங்கி விட்டு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவர் என்று இங்கிலாந்து நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் தொடுத்த இந்த வழக்கு லண்டனில் உள்ள தலைமை திவால் நிலை மற்றும் நிறுவனங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரிக்ஸ், மல்லையா கடன்களை முழுமையாகவும், நியாயமாகவும் செலுத்துவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்டு அவரை திவாலானவராக அறிவித்தார்.
இதையடுத்து உலகெங்கும் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது நிறுவனத்தை உருவாக்கவோ முடியாது. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு மல்லையா இனி இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
திவாலானவராக அறிவிக்கப்பட்டதையடுத்து மல்லையா பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கிரடிட் கார்டுகள் மற்றும் சொத்துக்கள் டிரஸ்டி ஒருவரிடம் ஒப்படைக்கப்படும். அந்த அதிகாரி அதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து அதனை விற்று கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.