ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றுவதை தடுக்க இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக விலகத் தொடங்கியதில் இருந்து தாலிபான்களின் கை ஓங்கியது.
நாட்டில் பாதி பகுதிகள், தாலிபான்கள் வசம் சென்ற போதும் நகரங்கள் அனைத்தும் அரசு படைகள் கட்டுப்பாட்டில் உள்ளன. எஞ்சியுள்ள அமெரிக்க படைகள், தாலிபான்கள் மீது அவ்வப்போது வான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அவர்களும் அடுத்த மாத இறுதிக்குள் தாயகம் திரும்புகின்றனர்.
இதனால் தாலிபான்கள் முன்னேறி வருவதை தடுக்க ஒரு மாதத்துக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காபுல், பஞ்ஷீர் மற்றும் நங்கர்ஹர் மாகாணங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.