மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 125 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் திடீர் காலநிலை மாற்றத்தினால் கனமழை பெய்து வருகிறது. ஜெர்மனியில் உள்ள எர்ஃப்ஸ்டாட் என்ற பகுதியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்
பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணியில் படகுகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன.
ரைன்லேண்ட்-பலட்டினேட் மாகாணத்தில் உள்ள, அஹ்ர்வீலர் மாவட்டத்தில், சுமார் ஆயிரத்து 300 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மாகாணத்தில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் ரைன்லேண்ட் பகுதியே வெறிச்சாடிக் காணப்படுகிறது. நகரமெங்கும் குப்பை கூழங்கள் மட்டுமே நிறைந்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பெல்ஜியத்தில் உள்ள லீஜ் என்ற நகரத்தில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சாலைகளில் பல அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
நாடு இதுவரை கண்டிராத பேரழிவு ஏற்பட்டுள்ளதாக பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டி க்ரூ தெரிவித்துள்ளார். மேலும் வரும் 20ம் தேதியை தேசிய துக்க தினமாகவும் அவர் அறிவித்துள்ளார்.