எதிர்காலத்தில் விண்வெளிக்குப் பயணிகளை அனுப்புவதற்கான சோதனை முயற்சியாகவே விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் யூனிட்டி 22 விண்கலத்தைச் செலுத்துகிறது.
எட்டுப் பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்டு பிரான்சன், பைலட்கள் இருவர், குழுவினர் மூவர் என மொத்தம் ஆறுபேர் செல்கின்றனர்.
அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று மாலை ஆறரை மணிக்கு ஏவப்பட உள்ளது. தனியார் விண்வெளிப் பயண அனுபவத்தை மதிப்பிட்டு எதிர்கால வாடிக்கையாளர்களுக்காகப் பயணத்தை மேம்படுத்தும் நோக்கில் ரிச்சர்டு பிரான்சன் செல்கிறார். விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவர் சிரிசா பந்த்லாவும் இதில் செல்கிறார்.
இவர் ஆந்திரத்தின் குண்டூரில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர். செயற்பாட்டுப் பொறியாளர் காலின் பென்னட், பெத் மோசஸ், பைலட்கள் டேவ் மேக்கே, மைக்கேல் மசுக்கி ஆகியோரும் செல்கின்றனர். விண்கலம் ஏவப்படுவதை விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் இணையத்தளத்தில் நேரலையாகக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.