இருதரப்பு வர்த்தகத்தில், வலுக்கட்டாயமான தவறான முடிவுகளை திணிக்கும் சீனா போன்ற நாடுகளை WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பு தண்டிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரிட்டனின் கான்வாலில் (Cornwall) நடக்க உள்ள ஜி-7 கூட்டத்தில் பங்கேற்க புறப்படும் முன், பெர்த் நகரில் நிகழ்த்திய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
கொரோனா வைரசின் துவக்கம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா கூறியதில் இருந்து, ஆஸ்திரேலிய கடல் உணவு, மாட்டிறைச்சி, நிலக்கரி, மரம், ஒயின் போன்றவற்றின் இறக்குமதியில் சீனா தடங்கல்களை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பார்லி இறக்குமதியையும் சீனா நிறுத்தியது.
தற்போது WTO விதிகளில் அத்துமீறும் நாடுகளை கண்டிக்க விதிகள் எதுவும் இல்லை என்பதால்,சீனாவின் இது போன்ற போக்குகளுக்கு முடிவு கட்டும் வகையில் WTO வின் விதிகளை திருத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஸ்காட் மோரிசன் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.