கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே வெளியுலகிற்கு பரவியிருக்க வேண்டும் என, அமெரிக்க அரசின் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில், கலிஃபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம், கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் கசிந்திருக்க வேண்டும் என்ற கருத்து, நம்பத்தகுந்ததாகவே உள்ளது என்றும், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தலாம் என அமெரிக்க ஆய்வகம் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வூகான் ஆய்வகத்தில் இருந்து தவறுதலாகவோ அல்லது பாதிக்கப்பட்ட விலங்கின் மூலம் மனிதனுக்கு கொரோனா பரவியிருக்கலாம் அமெரிக்க உளவு நிறுவனங்கள் சந்தேகிக்கின்றன. இதற்கேற்ப, 2019ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் பணியாற்றிய 3 ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அமெரிக்க அரசு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.