மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை ஹமாஸ் மற்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் காசா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுக்களுக்கும் இடையேயான மோதல் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு ஒரு சிறிய இடைவெளி விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் ராணுவம் காசா மீது குண்டுமழை மற்றும் ராக்கெட் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஐ.நா. அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹமாஸ் போராளிகளை முழுமையாக அழித்து மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) என்பவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் போராளிகளும் இஸ்ரேலிய நகரங்கள் மீதுகடந்த ஒரு வாரத்தில் 2,800 ஏவுகணைகளை வீசினர்.
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் 61 குழந்தைகள் உள்பட 213 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே ஹமாசின் ராக்கெட்டுகளை இரும்பு கோபுரம் என்ற பொருள்படும் அயன் டோம் ஏவுகணை எதிர்ப்பு முறை மூலம் இஸ்ரேல் நிர்மூலமாக்கி வருகிறது, 43 மைல்களுக்கு அப்பால் இருந்தே எதிரிகளின் ராக்கெட்டுகளை கண்டுபிடித்து, அவை அருகில் வரும் போது அதை இடைமறித்து தாக்கி அளிக்கும் இந்த அயன் டோம் எதிர்ப்பு முறையை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது
இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சி அரை லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள், பாதுகாப்பான இடங்களில் ஐ.நா அமைத்துள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் அத்துமீறலை போர்க்குற்றம் என ஆம்னஸ்டி இன்டர்நேஷல் வர்ணித்துள்ளது.