கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
லாஸ் ஏஞ்சலஸில் Cedars-Sinai மருத்துவ மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு, ஒரு டோஸ் மூலம் உருவான எதிர்ப்பாற்றல், கொரோனா பாதிக்காதவர்களுக்கு இரண்டு டோஸ்கள் மூலம் உருவான எதிர்ப்பாற்றலுக்கு சமமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா பாதித்து மீண்டவர்கள் எனில்,Pfizer அல்லது Moderna தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டாலே போதுமானது என அந்த ஆய்வு காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கருத்தை இத்தாலிய ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது. ஜான்சன் அண்டு ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையிலும், தொற்று பாதித்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் போதுமானது என்றால் உலகளவில் 11 கோடி டோஸ்கள் சேமிக்கப்படும் என்பதாலும் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.