யானை காப்பாளர் ஒருவரிடம் குட்டி யானை ஒன்று குழந்தையை போல சுட்டித்தனமாக சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.
என்னதான் செல்ல பிராணிகளை ஆசை ஆசையாக வளர்த்தாலும், சில சமயங்களில் அவை செய்யும் லூட்டி தாங்க முடியாது . இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டே உரிமையாளரை டயர்டு ஆக்கிவிடும்.
சில சமயம் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளைப் போல, காட்டு மிருகங்களும் குழந்தைத் தனமாக நடந்து கொள்ளும். அது பார்க்கவே மிக அழகாக இருக்கும். அப்படி ஒரு யானை குட்டி துரு துரு எனச் சேட்டை செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
கண்ணுபிரேம்((Gannuprem)) என்ற பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கில் அண்மையில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் யானை காப்பாளர் ஒருவர் , பெண் யானை இருக்கும் வளையத்திற்குள் நின்று மண்ணை சமப்படுத்தும் பணி செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு இருக்கும் குட்டி யானை, காப்பாளரை வம்பிற்கு இழுக்கத் தொடங்குகிறது.காப்பாளரைப் பணி செய்யவிடாமல் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்கிறது அந்த யானை குட்டி. காப்பாளரோ அதைச் சிறிதும் சட்டை பண்ணாமல், தொடர்ந்து தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். அந்த குட்டியும், காப்பாளரை விடுவதாக இல்லை. "அது எப்படி நான் விளையாடக் கூப்பிடும்போது நீங்க வராம இருக்கலாம்" என்பது போல, காப்பாளரைச் செல்லமாக பின்னே நெட்டி கீழே தள்ளி அவர் மீது அமர்ந்துகொண்டது அந்த குட்டி யானை. பின்னர் நாய்க் குட்டி போலக் காப்பாளரின் முகத்தை தும்பிக்கையால் வருடி கொஞ்சி விளையாடத் தொடங்கியது. தாய் யானையோ "அப்பாடா எனக்கு ஒரு வழியா பிரேக் கிடைச்சிருச்சு" என்பது போல ஹாயாக வளையத்தை சுற்றி வருகிறது.
தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிக் காண்போர் மனதைக் கவர்ந்து வருகிறது.