தனது சொந்த சகோதரனையே மணப்பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.
சீனாவின் ஜியாங்க்சு (Jiangsu) பகுதியில் வசிக்கும் மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சில நிமிடங்களில் திருமணம் நடைபெற உள்ளது என்ற சந்தோஷத்தில் மணமகனும், மணமகளும் இருக்க அங்கு பூகம்பம் வெடித்தது. திருமணத்திற்கு தயாரான மணமகளை பார்த்த மணமகனின் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பிறப்பில் இருந்தே இருக்கும் தழும்பு ஒன்று மணமகளின் உடலில் இருக்க அதனை பார்த்த மணமகனின் தாய், அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மணமகளின் குடும்பத்தாரிடம் அவரின் உண்மையான தாய், தந்தை குறித்து விசாரித்தார்.
அப்பொழுது தான் அந்த தகவல் மணமகன் மற்றும் மணமகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் தத்தெடுத்து தங்களது மகளாக வளர்த்து வந்ததாக அவளின் பெற்றோர் கூறியுள்ளனர். அதே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது பெண் குழந்தையை மணமகனின் பெற்றோர் தொலைத்து உள்ளனர். அந்த பெண் தான் இந்த மணமகள் என்பதை அவளது உடலில் இருந்த தழும்பை கொண்டு மணமகனின் தாய் கண்டறிந்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் தன்னை பெற்றெடுத்த நிஜ தாயை கட்டியணைத்து கொண்டு மணமகள் அழுதார்.
இதன் மூலம் மணமகனுக்கு, மணமகள் சகோதரி உறவு முறையாவதால் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது வேறொரு அதிர்ச்சி தகவலையும் மணமகனின் பெற்றோர் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். அதாவது, தங்களது பெண் குழந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து விட்டதால், வேறொரு ஆண் குழந்தையை எடுத்து தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும், அவன் தான் இந்த மணமகன் என்றும் கூறினர். இதனை கேட்டதும், தாங்கள் உறவு முறையில் சதோதரன், சகோதரி இல்லை என்ற ஆனந்தத்தில் மணமகனும், மணமகளும் திளைத்திருக்க இருவருக்கும் நிச்சயத்தப்படி திருமணம் நடைபெற்றது.