ரஷ்யாவில் புயல் மய்யம் கொண்டுள்ளது போல வட்டத்தில் சுற்றிவரும் ரெய்ண்டீயர் எனப்படும் கலைமான்களின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கலைமான்கள் அதிவேகமாக ஓடக்கூடியவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எதிரிகள் தாக்க வரும்போது, லாவகமாகத் துள்ளிக் குதித்துத் தப்பி ஓடிவிடும். ஆனால் கலைமான்களின் வினோதமான பழக்கம் ஒன்று காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
ரஷ்யாவின் ஆர்டிக் வட்டத்தில் அமைந்துள்ளது கோலா தீவு. இங்கு கலைமான்கள் பெருமளவில் வசிக்கின்றன. அண்மையில், லெவ் ஃபெடோசீவ் என்ற போட்டோக்ராபர் அந்த தீவுக்குச் சென்றிருந்தபோது வினோதமாகச் சுற்றித்திரியும் கலைமான்களை கண்டார். உடனே தனது ட்ரோன் மூலம் அந்த காட்சிகளைப் பதிவு செய்தார். அதில் கலைமான்கள் ஒன்றன்பின் ஒன்றாக வட்டத்தில் சுற்றி வருகின்றனர். அதைப் பார்க்கும்போது, புயல் மய்யம் கொண்டிருப்பது போலத் தோற்றமளிக்கிறது.
இதனைக் கலைமான் சூறாவளிகள் என்று அழைப்பார்கள். பொதுவாகக் கலைமான்கள் அச்சத்தில் இருக்கும்போது இவ்வாறு சுற்றிவருவது வழக்கம். கால்நடை மருத்துவர் ஒருவர் அவைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு முன் அந்த கலைமான்கள் இவ்வாறு சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தங்கள் எதிரியைக் குழப்பத்தில் தள்ளித் தாக்குதலில் இருந்து தப்பவும் கலைமான்கள் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வட்டத்தில் சுற்றி வரும். பொதுவாகப் பெண் கலைமான்களும், குட்டிகளும் வட்டத்தின் நடுவில் இருக்கும். ஆண் கலைமான்கள் வட்டத்தின் வெளிப் பகுதியில் சுற்றும்.
அதே போல ,வசந்த காலங்களில் கலைமான்கள் ஒன்றுகூடி "சூப்பர்ஹெர்ட்" என்ற அமைப்பை உருவாகும். அதில் கிட்டத்தட்ட 5,00,000 கலைமான்கள் இடம்பெறும். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.