இங்கிலாந்து அரச குடும்பத்தினரால் தான் நிறவெறியுடன் நடத்தப்பட்டதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு வந்ததாகவும் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்த இளவரசர் ஹாரி அமெரிக்க கருப்பினத்தைச் சேர்ந்த நடிகையான மேகன் மெர்கலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்நிலையில் தொலைக்காட்சித் தொகுப்பாளரான ஓபரா வின்ஃப்ரேவின் நிகழ்ச்சியில் ஹாரியும், மெர்கலும் பங்கேற்றனர். அப்போது மனம் திறந்து பேசிய மேகன் மெர்கல், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்.
குழந்தை பிறக்கும் வரை தான் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டதாகக் கூறிய மேகன், அரச குடும்பத்தினராலும், இங்கிலாந்து ஊடகங்களாலும் தான் வேறுவிதமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்தால் தான் கடுமையாக நடத்தப்பட்டதாக் கூறிய அவர், அதனை விவரிக்க இயலாது என்று குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அரச குடும்பத்து உறுப்பினர்களால் தான் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல உணர்ந்ததால், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டதாவும் மேகன் மெர்கல் கூறினார். அப்போது உடனிருந்த இளவரசர் ஹாரி, அதனை ஆமோதிப்பது போல மெர்கல் சிக்கிக் கொண்டதாகக் கூறினார்.
தனக்குத் தெரியாமல் தானே சிக்கிக் கொண்டதாவும், தனது தந்தையும், சகோதரரும் தன்னை சிக்கவைத்து விட்டதாகவும் ஹாரி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தனது தந்தையான இளவரசர் சார்லசை தனக்கு அதிகம் பிடிக்கும் என்று கூறிய அவர், ஒருகட்டத்தில் தனது பிரச்னைகள் குறித்து பேச விரும்பிய போது, அதனை சார்லஸ் கேட்க விரும்பவில்லை என்றும் ஹாரி குறிப்பிட்டார்.