ஆஸ்திரேலியாவில், 35 கிலோ அளவுக்கு உடல் முழுவதும் ரோமம் வளர்ந்து, பார்வை மறைக்கப்பட்ட நிலையில் வனத்தில் சுற்றித் திரிந்த செம்மறி ஆட்டை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளனர் தன்னார்வலர்கள்.
ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்னுக்கு வடக்கெ 60 கி.மீ தொலைவில் உள்ள லான்ஸ்ஃபீல்ட்டில் உள்ளது எட்கர்ஸ் மிஷன் சரணாலயம். இந்த சரணாலயத்தில் பல வருடங்களாக ரோமம் வெட்டப்படாததால், உடல் முழுவதும் ரோமம் வளர்ந்து கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக சுற்றித் திரிந்தது செம்மறியாடு ஒன்று. அதன் உடலிலிருந்த ரோமங்கள் மட்டும் சுமார் 35 கிலோ எடை இருந்தது. இது இளம் வயதுடைய கங்காரு ஒன்றின் எடையில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.
உடலில் வளர்ந்திருந்த ரோமத்தை சுமக்க முடியாமல், சிரமத்துடன் வனத்தில் சுற்றித் திரிந்த போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிலர் பார்த்து எட்கர்ஸ் தொண்டு நிறுவனத்துக்குத் தகவல் அளித்தனர். பாரக் என்று பெயர் சூட்டப்பட்ட, இந்த செம்மறி ஆட்டை எட்கர்ஸ் மிஷன் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தேடத் தொடங்கினர். ஒரு வார கால தேடுதலுக்குப் பிறகு, பாறை ஒன்றின் மீது கண்கள் மறைக்கப்பட்ட நிலையில், அடுத்த அடியை எங்கு வைப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த போது பாரக் செம்மறி ஆட்டைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் செம்மறி ஆட்டின் உடலில் வளர்ந்திருந்த 35.4 கிலோ கிராம் எடையுள்ள ரோமத்தை வெட்டி மறுவாழ்வு அளித்தனர்.
ரோமம் வெட்டப்பட்டதையடுத்து தொண்டு நிறுவனத்தின் மறுவாழ்வு மையத்தில் மகிழ்ச்சியுடன் சுற்றித் திருந்து வருகிறது பாரக். இது குறித்து எட்கர்ஸ் மிஷனின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கைல் பெஹ்ரெண்ட், “வனத்தில் செம்மறி ஆட்டைக் கண்டுபிடித்த போது அதன் நிலை மிக மோசமாக இருந்தது. முகம் முழுவதும் கம்பளி ரோமம் வளர்ந்து பார்வை முழுவதையும் மறைத்திருந்தது. இந்த வகை செம்மறி ஆடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் ரோமத்தை வெட்டி எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலை தான் ஆகும். இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு எடையை இந்த ஆடு எப்படி சுமந்துகொண்டு வாழ்ந்தது என்பதே வியப்பாக இருக்கிறது. ஆடுகள் உண்மையிலேயே எந்த அளவுக்குத் துணிச்சலான விலங்கு என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்” என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.