இந்தோனேசியாவில் ரத்த சிவப்பு நிறத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில், அதற்கு காரணம் சாயப்பட்டறைகளே என தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள ஜெங்கோட் என்ற கிராமத்தில் ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையெங்கும் சிகப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் நீரில் அப்பகுதி மக்களும் சிறுவர்களும் அச்சமின்றி நடந்து செல்கின்றனர்.
ஒட்டுமொத்த கிராமத்திலும் சூழ்ந்துள்ள ரத்தச் சிவப்பு நிற நீர் சமூக வலைதளங்களில் வைரலாகப்பட்டதை அடுத்து, ஜெங்கோட் கிராமத்தில் ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதை, உள்ளூர் அரசு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் தண்ணீர் சிகப்பானதற்கான காராணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெங்கோட் கிராமம் அமைந்துள்ள பெகலோங்கன் நகரம் பாரம்பரிய முறைப்படி ஆடைகளுக்கு மெழுகிட்டு சாயமேற்றும் இடமாக உள்ளது. இங்கு பாரமபரியமிக்க படிக் என்ற முறையில் சாயமேற்றப்படும் ஆடைகள் அந்நாட்டில் மிகவும் பிரபலமானவை.
இந்த நிலையில் ஆடைகள் மீது சாயமேற்ற பயன்படும் சாயம் கலந்ததால் தான் வெள்ளநீர் ரத்த சிகப்பு நிறத்தில் மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த மாதமும், மற்றொரு கிராமத்தில் பச்சை நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெகலோங்கன் நகரில் இருக்கும் நதிகளும் சாயப்பட்டறைகளால் அவ்வபோது நிறமாறுவதாக கூறப்படுகிறது.
சாயம் கலந்த நீரில் நடக்கும் பொழுது கால்களில் அரிப்பு ஏற்படுவதுடன், பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.