அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் களையிழந்த சுற்றுலாத்துறையை மீண்டும் பழையநிலைக்கு கொண்டுவர சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 அமெரிக்க டாலர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பல்வேறு நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுவரை உலக அளவில் கொரோனாவினால் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 23 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளில் கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால், பொருளாதார வளர்ச்சி முற்றிலும் முடங்கியது. தொழில்கள், வர்த்தகம், குறுந்தொழில்கள் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளன. அதிலும் உலகம் முழுவதும் அதிக வருமானத்தைத் தரக்கூடிய சுற்றுலாத் துறை ஊரடங்கால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு கெடுபிடிகளை தளர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவர அமெரிக்காவில் உள்ள ஒரு சுற்றுலா நிர்வாகம் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாண்டா மரியா பள்ளத்தாக்கு. அழகான சுற்றுலாதளமான இங்கு அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைகள், அழகான கடற்கரைகள், கண்கவர் ஓட்டல்கள், மதுபான விடுதிகள் என பொழுதுபோக்குவதற்கு ஏற்ற வகையிலான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு கொரோனாவால் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இங்கு இரண்டு நாட்கள் தங்கி கண்டு களிக்கும் சுற்றுலா வரும் பயணிகள் அனைவருக்கும் 100 அமெரிக்க டாலர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு ரூ,7200 ரூபாயாகும். மேலும் இந்த திட்டமானது வரும் மார்ச் 31 அன்று வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் களையிழந்துள்ள சுற்றுலாத்துறை, மீண்டும் பொலிவுப் பெறும் என்று சாண்டா மரியா பள்ளத்தாக்கு பகுதியின் இயக்குநர் ஜெனிபர் ஹாரிசன் தெரிவித்துள்ளார். கரும்பு தின கூலியா என்று கேட்பது போல சுற்றுலா வரும் பயணிகளுக்கு 100 அமெரிக்க டாலர் கொடுப்பது பலரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.