மலேசியாவில் வளர்ப்பு மகளிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் மலேசியத் தமிழரான பெண் நீதிபதி குணசுந்தரி.
மலேசியாவை சேர்ந்த பெற்றோர் கடந்த 2015 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண் 2016 ம் ஆண்டு வேறு ஒரு நபரைத் திருமணம் செய்துகொண்டார். அந்த பெண் தன் பெண் குழந்தையுடன் புதிதாகத் திருமணமான நபருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த நபர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான். அப்போது, தன் பெற்ற மகளாகப் பாவிக்க வேண்டிய தனது மனைவியின் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கியுள்ளான். 12 வயது வளர்ப்பு மகளிடம் கடந்த 2018 - ம் ஆண்டு ஜனவரி 5 - ம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24 ம் தேதி வரை சுமார் 105 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான். மனைவி வேலைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை சீரழித்துள்ளான் அந்த பாவி.
இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டியும் கடுமையாக அடித்தும் உள்ளான். இந்த சூழலில் அந்த சிறுமிக்குத் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட, அந்த சிறுமியின் அத்தை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி தன் அத்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியின் தாயும் அத்தையும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய பெண் நீதிபதியான குணசுந்தரி மலேசிய வாழ் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.