ஒற்றுமைதான் முன்னேற்றத்திற்கு வழி என்றும், ஒற்றுமை இல்லாமல் அமைதி நிலவாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பைடன், மக்களிடையே உரையாற்றும் போது, இது நெருக்கடி மற்றும் சவாலின் வரலாற்றுப் பாதை என்று குறிப்பிட்டார்.
ஒற்றுமையாக இருந்தால், ஒன்றாகச் செயல்பட்டால் முன்னேற முடியும் என்று கூறிய அவர், அனைத்தையும் புதிதாகத் தொடங்கலாம் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் ஏராளமானோரின் உயிரை பறித்துள்ளது எனவும் லட்சக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு பயங்கரவாதம் மற்றும் வெள்ளையின வாதம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறிய அவர், நாட்டை ஒன்றிணைப்பதற்கு ஒட்டு மொத்த மக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமை இல்லாமல் அமைதிநிலைக்காது என்று கூறிய ஜோ பைடன், வருங்காலத்தில் அமெரிக்கா சிறப்பான நாடாக திகழும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஒருவருக்கொருவர் மரியதையுடனும் இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், அமெரிக்க மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றும் ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் அதிபராகவே நான் இருப்பேன் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.