அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜோ பைடன் அதிபராகத் தேர்வானார். இதையடுத்து, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் புதிய அதிபர் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அப்போது ராணுவ இசைக் குழுவினர் இசைக் கருவிகளை இசைத்தனர்.
அமெரிக்க தேசிய கீதத்தை ஜோ பைடனின் ஆதரவாளரும், பாப் பாடகியுமான லேடி காகா பாடினார். தொடர்ந்து நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது.
இதையடுத்து, துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
127 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குடும்ப பைபிளை மனைவி ஜில் பைடன் கையில் வைத்திருக்க, அதன்மீது ஆணையாக ஜோ பைடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பதவி விலகும் துணை அதிபர் பென்ஸ் ஆகியோர் தங்கள் மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. அந்நாட்டில் கடந்த 150 ஆண்டுகளில், புதிய அதிபர் பதவி ஏற்பு விழாவில், பதவி விலகுபவர் பங்கேற்காதது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண 1,000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. 25 ஆயிரம் ராணுவவீரர்களும், 4000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது.