தனக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் தனித் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, ‘கைலாசா’ எனும் தனி நாட்டையே உருவாக்கி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டார் பிரபல சாமியார் நித்யானந்தா. கைலாசா நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் குடியேறலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரது பக்தர்களும் அவரைப் பின்தொடர்பவர்களும் ஆர்வத்துடன் கைலாசாவுக்குக் குடியேற விண்ணப்பித்து வருகிறார்கள். உங்களுக்கும் கைலாசாவுக்குக் குடியேற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா? அதற்கு முன்பு இந்த கட்டுரையை ஒரு முறை முழுவதும் படித்துவிடுங்கள்..!
அவனது பெயர் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ். பொதுவாக ஜிம் ஜோன்ஸ் என்று அழைப்பர். 1931 - ம் ஆண்டு மே மாதம் 13 ம் தேதி அமெரிக்காவில் உள்ள இண்டியனா மாகாணத்தின் க்ரீட் (( Crete )) எனும் ஊரில் பிறந்தான். இவனது தந்தை முதலாம் உலகப்போரில் பங்குபெற்று ஊனமடைந்த சிப்பாய் ஆவார். ஜோன்ஸ்க்கு 14 வயது இருந்த போது அவனது தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர் இதனால், இவன் அம்மாவுடன் தனியாக வசித்தான். சிறு வயதில் ஜோன்ஸ் வெகு நேரத்தைத் தனிமையிலேயே கழித்து வந்துள்ளான். அவனுக்கு அதிக நண்பர்களும் கிடையாது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவனுக்குக் கம்யூனிச கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறு வயது முதலே தேவாலயத்தில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், ஒரு பாதிரியாராக மாறி பலருக்கு மத போதனை செய்ய ஆரம்பித்தான். வெள்ளை இன மக்களால் நிராகரிக்கப்பட்ட அமெரிக்கக் கறுப்பின மக்களைக் குறிவைத்து தன் பிரச்சாரத்தை முன்னெடுத்தான் ஜோன்ஸ். 'நிராகரிப்பு, விரக்தி, தீராத உடல் நோய், பிரச்னை, வாழ்க்கையில் துயரம் மட்டும் தான் மிஞ்சுகிறதா??? என்னுடன் வாருங்கள் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறேன்' என்று மக்களிடம் மத போதனை செய்தான்.
ஜோன்ஸின் நல்ல நேரமா அல்லது அந்த மக்களின் கெட்ட நேரமா என்று தெரியவில்லை. ஜோன்சைத் தேடிவந்தவர்களின் பிரச்னைகள், துயரங்கள் மறைந்தன. ஜிம் ஜோன்சைத் தேடி மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். அவனும் பிரபலமடைய ஆரம்பித்தான்.
1955 - ம் ஆண்டு தனக்கென்று ஒரு புதிய தேவாலயத்தை உருவாக்கினான். அதற்கு Peoples Temple Full Gospel Church என்று பெயர் சூட்டினான். சுருக்கமாக, ’மக்கள் கோயில்’ என்று அழைக்கப்பட்டது. உள்ளூர் நாளிதழ்கள், கறுப்பின மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் இண்டியானாவில் ஜிம் ஜோன்சின் செல்வாக்கும் சக்தியும் நாளுக்கு நாள் பெருகத் தொடங்கியது. குறிப்பாக, அமெரிக்காவின் வசிக்கும் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அவனை ஒரு கடவுளாகவும் கடவுளின் தூதராகவும் பார்க்கத் தொடங்கினர். மக்கள் ஆதரவால், அவன் தனது தேவாலயங்களை பல நகரங்களில் அமைக்கத் தொடங்கினான். எங்கு சென்றாலும் அவனது சிஷ்யர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. ஜிம் ஜோன்ஸ் கால் பதித்த இடங்களில் எல்லாம் மக்கள் பணத்தைக் கொண்டுவந்து கொட்டத் தொடங்கினர்.
ஜிம் ஜோன்சின் வாழ்க்கை செம ஜோராக சென்றுகொண்டிருந்த போது, 1973 ம் ஆண்டு பிரச்னை தலை தூக்கத் தொடங்கியது. அவனது தேவாலயங்களில் சட்ட விரோத சம்பவங்கள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது மட்டுமல்லாமல், ஆண் மற்றும் பெண் என்று இருபாலரிடமும் ஜிம்ஜோன்ஸ் உறவு வைத்துக் கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், 1973 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கைது செய்யப்பட்டான்.
இதையடுத்து அமெரிக்கா தனக்கு சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த ஜிம் ஜோன்ஸ், தென் அமெரிக்க நாடான கயானா நாட்டில் தன் சாம்ராஜ்யத்தை நிறுவ முடிவு செய்தான். தன் பக்தர்களிடம், ”விண்ணுலகில் சொர்க்கம் இருப்பதைப் போல நமக்கென்று தனி நாட்டை கடவுள் கொடுக்கப் போகிறார். நாம் விரைவில் அங்கு சென்று குடியேறுவோம்” என்று அறிவித்தான். இந்த அறிவிப்பை ஜிம் ஜோன்சின் பக்தர்கள் ஆரவாரமிட்டு வரவேற்றனர்.
கயானா அரசிடம் அனுமதி வாங்கி, 3842 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை விலைக்கு வாங்கி, வனத்துக்கு மத்தியில் புது நகரத்தை நிர்மாணித்து, அதற்கு ‘ஜோன்ஸ் டவுன்’ என்றும் பெயர் வைத்தான். தன் சிஷ்யர்களை சிறிது சிறிதாக, அமெரிக்காவிலிருந்து ஜோன்ஸ் டவுனுக்கு அழைத்து வந்து குடியிருப்புகளை நிறுவத் தொடங்கினான்.
கடவுளே நமக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கும் ஜோன்ஸ் டவுனுக்கு சென்றால் தெருவெங்கும் பாலாறும், தேனாறும் பாயும். நேராக சொர்க்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்று நம்பிய பக்தர்கள் அங்கு சென்று குடியேறத் தொடங்கினர்.
ஜோன்ஸ் டவுனுக்கு மக்கள் வரத் தொடங்கியபோது நல்லவனைப் போலத் தோற்றமளித்த ஜிம் ஜோன்ஸ் மக்கள் குடியேறியதும் தன் முகத்தை மாற்றிக்கொண்டான். தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொண்டான். அதையும் பக்தர்கள் பணிவுடன் ஏற்றுக்கொண்டனர். தன் பக்தர்களிடம் ஆண், பெண் என்று பார்க்காமல் செக்ஸ் விளையாட்டுகளில் ஈடுபட்டான். ‘பாவங்களிலிருந்து விடுபட்டு கடவுளை அடையும் பரிசுத்தமான வழி” என்று கூறுவான். மேலும், அவர்களின் சொத்துகளையும் எழுதி வாங்கிக்கொண்டான்.
அவனது சொல்பேச்சு கேட்டு நடக்காதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அடம் பிடிக்கும் குழந்தைகளை டின்னுக்குள் அடைத்து விடுவான். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக் கிழமை முழுவதும் கடவுள் வழிபாட்டில் மக்கள் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு நாளும் மக்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். கொடுமைப் படுத்தப் பட்டனர். அடிமையைப் போல நடத்தப்பட்டனர். இந்த நரகத்திலிருந்து விடுபட மாட்டோமா என்று நினைக்கத் தொடங்கினர்.
இதையடுத்து, ஜோன்ஸ் டவுன் விவகாரம் மெல்ல வெளியே கசியத் தொடங்கியது. ஜோன்ஸ் டவுனுக்குக் குடியேறியவர்களின் உறவினர்கள் அமெரிக்க அரசிடம், ‘ஜோன்ஸ் டவுன் நிர்வாகம் மீது விசாரிக்க வேண்டும்’ என்று புகார் அளித்தனர். இதையடுத்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் லியோ ராயன் தலைமையிலான குழுவினர் 1978, நவம்பர் 17 - ம் நாள் ஜோன்ஸ் டவுனுக்கு சென்று விசாரனை நடத்தினர். அங்கு வசித்த மக்களுடன் அவர் அடுத்த நாள் புறப்பட்ட போது ஜிம் ஜோன்ஸ் பாதுகாவலர்களால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரை சுட்டுக் கொன்றால் என்ன நடக்கும் என்பதை அறிந்துகொண்ட ஜிம் ஜோன்ஸ் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தான். அதன்படி ஜோன்ஸ் டவுனில் வசித்த மக்கள் அனைவரும் ஒரு இடத்துக்குக் கொண்டுவரப்பட்டனர்.
அவர்களை நோக்கி, “நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பரிசுத்தமானது என்று நினைத்தால், நான் சொல்வதைக் கேளுங்கள். என்னோடு உயிரை விடத் தயாராகுங்கள். இது இறைவனின் கட்டளை. நம் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. நாம் அனைவரும் சொர்க்கத்தில் மீண்டும் பிறப்போம். அந்தப் புது உலகில் நாம் இன்பங்களை மட்டுமே அனுபவிக்கப் போகிறோம். என்னுடன் சொர்க்கத்துக்கு வாருங்கள்” என்று கல்லும் கசிந்துருகும் படி பேசினான்.
அவன் பேசியதைக் கேட்டதும் மக்கள் அனைவரும் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போலத் தலையாட்டினர். அடுத்த கணம் ஒரு ட்ரம் கொண்டுவரப்பட்டு அதில் சயனைடு கலக்கப்பட்டது. அதை சுட்டிக் காட்டிய ஜிம் ஜோன்ஸ், “இந்த சொர்க்க பானத்தைப் பருகி நாம் சொர்க்கதுக்கு செல்வோம்” என்றான்.
பல் இல்லாத கிழவிகள் முதல் பல் முளைக்கத் தொடங்கிய குழந்தைகள் வரை வரிசையாக நின்று அந்த சயனைடு தண்ணீரைக் குடித்தனர். மறுத்தவர்கள் துப்பாக்கி முனையில் குடிக்க வைக்கப்பட்டனர். எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தன் பக்தர்கள் தன் கண் முன்பே ரத்தம் கக்கி இறப்பதைப் பார்த்த ஜிம் ஜோன்ஸ், “முடிந்த வரை முயற்சி செய்துவிட்டேன்” என்று சொல்லியபடி நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து, தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டான். இந்தக் கொடூர சம்பவத்தில் 918 பேர் பரிதாபமாக இறந்தனர். அதில் 270 பேர் சிறுவர்கள் என்பது தான் துயரத்திலும் துயரம். அடுத்த நாள் ஹெலிஹாப்டரில் அதிகாரிகள் வந்தபோது ஜோன்ஸ் டவுன் முழுவதும் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்தபோது உலகமே ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனது.
வசீகரம் நிறைந்த ஒரு போலி சாமியார், தன்னையே கதி என்று நம்பி வந்த பக்தர்களை எந்த அளவுக்கு மூளைச் சலவை செய்து அடிமையாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணம் தான் ஜிம் ஜோன்ஸ்.