எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள சக்காரா ((Saqqara)) கல்லறை நகரில் பண்டைய எகிப்து ராணி ஒருவரின் இறுதிச் சடங்கு கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு புதிய எகிப்து ராச்சியத்தின் வரலாற்றை மறுவரையறை செய்யும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சக்காரா நகரம், எகிப்தின் தலைநகரமான கெய்ரோ நகரத்திற்குத் தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மெம்பிசை தலைநகராகக் கொண்ட பண்டைய எகிப்து பார்வோன்களின் கல்லறைகள் சக்காரா நகரில் தான் அமைந்துள்ளன. கிமு1550 முதல் கிமு 1077 முடிய 473 ஆண்டுகள் நீடித்த புதிய எகிப்து ராச்சிய பார்வோன்களான தூத்மோஸ், இரண்டாம் ராமேசஸ் மற்றும் துட்டன்காமன் ஆகியோரின் கல்லறைகளும் இந்தப் பகுதிகளில் தான் அமைந்துள்ளன. தொல்லியல் நகரம் என்று அழைக்கப்படும் சக்காரா யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், எப்போதுமே இந்தப் பகுதி தொல்லியல் ஆய்வாளர்களுக்கு முக்கிய வேட்டை நிலமாகத் திகழ்கிறது.
புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ் (( Zahi Hawass )) தலைமையிலான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சக்காராவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான், சக்காராவில் 4200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய ராச்சியத்தின் ஆறாவது வம்சத்தின் மன்னர் முதல் பார்வோன் டெட்டியின் ((King Teti)) பிரமிடுக்கு அருகே அவரது ராணி நெட்டியின் (( Queen Neit )) இறுதிச் சடங்கு கோயிலைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2010 - ம் ஆண்டே இந்த இறுதிச் சடங்கு கோயில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இது ராணிக்கு சொந்தமனாது என்பது தற்போதே கல்வெட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு புதிய ராச்சியத்துக்கு முந்தைய 54 மரத்தாலான சவப்பெட்டிகள், மம்மிகள், சிலைகள், முகமூடிகள், விளையாட்டுப் பொருட்கள், மரப் படகுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகளில் சிப்பாய் ஒருவரின் உடல் போர்க்கருவிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன சர்கோபகஸ் ((sarcophagus)) எனப்படும் பூ வேலைப்பாடுகள் நிறைந்த பழங்கால கல்லால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றும் கிடைத்துள்ளது. சவப்பெட்டிகளில் தீட்டப்பட்ட மனித வடிவ வண்ண ஓவியங்கள் இன்னும் அப்படியே பொலிவு மாறாமல் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன.
”இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் சக்காரா மற்றும் புதிய எகிப்து ராஜ்ஜியத்தின் வரலாற்றை மாற்றியமைக்கும்” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ் தெரிவித்துள்ளார்.
சக்காரா கல்லறை நகரில் புதைக்கப்பட்ட தொல்பொருட்களில் 30 சதவிகிதம் மட்டுமே இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளது. மீதி 70 சதவிகித கல்லறைகள் இன்னும் நிலத்துக்கடியில் தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு எகிப்தின் சுற்றுலாத் துறையை மேலும் ஊக்கப்படுத்தும் என்று கருதப்படுகிறது. 2019 - ம் ஆண்டு 13.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எகிப்துக்கு வருகை தந்த நிலையில், கொரோனா நோய் பரவலால் வெறும் 3.5 மில்லியனாகக் குறைந்தது. அதனால், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.